இன்று
(மே 8, 2015) டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் சர்ச்சைக்குரிய நியூட்டிரினோ திட்டம்
குறித்து வெளியாகியிருக்கும் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
தேனி மாவட்டம் போட்டிபுரம் எனும்
கிராமத்தில் பொதுவிவாதம் நடந்தபோது, மாறன் என்பவர் அப்பகுதியில் இருக்கும்
புதர்களைத் தான் எங்கள் பெண்கள் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர், அதனை
நாங்கள் இந்த ஆய்வரங்கத்திற்காக இழக்கத் தயாரில்லை என்றார். மேலும் அவ்வாராய்ச்சியினால்
மக்களுக்கு பயன் ஏதும் இல்லை என்றார்.
கழிப்பிடம் இல்லையென்றால்,
அவற்றைக் கட்டித்தாருங்கள் எனக் கேட்பதுதானே நியாயம், மாறாக ஆய்வரங்கமே வேண்டாம்
என்றால் எப்படி, தவிரவும் ஆராய்ச்சியால்
உடனடிப் பயன் ஏதுமில்லாவிடினும், நீண்டகாலத்தில் ஒட்டுமொத்த சமூகமும் பயன்படத்தானே செய்யும்
என்பது விஞ்ஞானிகளின் வாதம். ஆனால் மாறனோ எதையும் காதில் வாங்கிக்கொள்ளவே தயாரில்லை.
பூவுலகின் நண்பர்களோ, ”நாங்கள்
ஒன்றும் முன்னேற்றமே வேண்டாமெனச் சொல்லவில்லை, இத்தகைய ஆராய்ச்சிகளில் இருக்கும்
ஆபத்துக்களைத் தான் எடுத்துரைக்கிறோம். நியூட்ரினோ ஆய்வின் விளைவாய் கதிரியக்கம்
வெளிப்படக்கூடும் இதை விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்கிறார்களே,” என்று
பதிலளிக்கின்றனர்.
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அதிகம் படித்திராத மக்களிடையே இருக்கும் அச்சங்களைப் பயன்படுத்தி
அவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர், தேவையில்லாத சிக்கல்களை உருவாக்குகின்றனர்,
எந்த ஆய்வில்தான் ஆபத்தில்லை, அதையெல்லாம் பார்த்தால் நாம் முன்னேறமுடியுமா,
எத்தனையோ விபத்துக்களைக் கடந்துதான் ஆங்கில மருத்துவமும் மற்ற பல துறைகளும்
வியக்கத் தக்க சாதனைகளை நிகழ்த்தியிருக்கின. ஒட்டுமொத்த மானுடமும் அவற்றின் பயனை
அனுபவிக்கின்றன என்பதும் நியூட்ரினோ ஆய்வை ஆதரிப்போரின் வாதமாக இருக்கிறது.
மேலும் தொண்டு அமைப்புக்கள் கிராமச்
சூழல், அங்கே அன்றாட வாழ்வு, அம்மக்களின் பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி
அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை சென்னை போன்ற நகரங்களில் நடத்துகின்றன. அவற்றில் இயற்கை
உணவு, உரங்கள், மூலிகைகள், நாட்டுப்புறக் கலை இவை முன்னிறுத்தப்படுகின்றன. அந்நிகழ்வுகளின்
நோக்கம் அண்மைக்காலங்களில் வேலை வாய்ப்பு தேடி நகரங்களில் குடிபுகுந்திருக்கும் இளைஞர்களைக் கவர்வதுதான். கடந்த ஓராண்டில்
சென்னையில் மட்டும் அத்தகைய நிகழ்ச்சிகள் பத்து அரங்கேயிருக்கின்றன.
குறிப்பிடத் தகுந்த தலித்
சிந்தனையாளர் ஸ்டாலின் ராஜாங்கம் இயற்கையோடு இயைந்த வாழ்வு, உணவுப் பழக்க வழக்கங்கள்,
இவற்றை வலியுறுத்துவது சரி, ஆனால் எல்லாவற்றிலும் தமிழ் இன அடையாளத்தைக் கொண்டு
வருவானேன் எனக் கேட்கிறார்.
(டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தியாளர் அப்துல்லா நூருல்லா)
தமிழ் இன அடையாளம் பலதளங்களில்
ஆர்வலர்களால்
வலியுறுத்தப்படுவது எனக்கும் ஏற்புடையதாய் இல்லை. எனவேயே இக் கட்டுரை.
தமிழ் இன அடையாளம்
என்பதே தலித்துக்களுக்கு விரோதமாக அமைந்துவிடுவதைத் தான் மறைமுகமாக ஸ்டாலின்
ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார் என நினைக்கிறேன். அவரது கவலையும் அச்சமும் சரியே.
தமிழ்த் தேசிய இயக்கங்கள்
இன்று பிராமணரல்லாத, முற்பட்ட மற்றும் இடை நிலை சாதியினரின் கட்டுப்பாட்டில்
இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.
அவ்வியக்கத்தை வழி நடத்துவோர்
தலித்துக்களுக்கு விரோதமானவர்கள் அல்லதான், அவர்கள் நிலை
குறித்து அவ்வப்போது ஏதாவது கவலை தெரிவிக்கவும் செய்வார்கள். ஆனால் தலித்
பிரச்சினைகளில் பெரிதாக அக்கறை ஏதும் இருக்காது, தலித்துக்கள் மீது வன்முறை
கட்டவிழ்த்துவிடப்படும்போது இத் தமிழ்த் தேசியர்கள் நேரடியாகத் தலையிடமாட்டார்கள்,
ஏதோ பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவர்.
முன்னொருமுறை இது பற்றி
விரிவாக விவாதித்திருக்கிறேன்:
https://goo.gl/5CcTGh
இன
அடையாள அணுகுமுறையினை நிராகரிக்கவேண்டியதற்கான வேறு பல காரணங்களும் அக் கட்டுரையில்
சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.
பூவுலகினரைப் பொறுத்தவரை டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தியாளர் கூறியிருப்பதைப் போல், அவர்கள் தமிழின அடையாளத்தைத் தொடர்ந்து முதன்மைப் படுத்தி
வந்திருக்கின்றனர். எனக்கு அதில் நெருடல் உண்டு. அவ்வமைப்பினரிடம் நேரடியாகப்
பேசாவிடினும் எனது கவலைகளை நான் தெரிவித்தே வந்திருக்கிறேன்
கூடங்குளம் உதயகுமார் தமிழின
அரசியலுடன் ஒன்றியபோதும் அது தவறு என வாதிட்டிருக்கிறேன். அப்போராட்டக்குழுவில் உள்ள
பலருக்கும் தங்களை பிரபாகரனின் தம்பிகளாகக் காட்டிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
வைகோவிலிருந்து சீமான் வரை எவ்வித நேர்மையும் இல்லாதவர்களையெல்லாம் வாரி
அணைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு பச்சை சந்தர்ப்பவாதிகளுடன் கை கோர்ப்பது எவ்விதமான
செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் என்பது குறித்து அவர்கள் கவலைப்படவே இல்லை.
பிரபாகரனின் சகிப்புத்
தன்மையற்ற அராஜகம், விடுதலைப் புலிகள் பொருளாதார அரசியலை ஏறத்தாழ முழுவதுமாகவே புறக்கணித்து தன்னின
மேலாதிக்க சிந்தனைகளில் ஆழ்ந்தது இவற்றின் இறுதி முடிவுதான் முள்ளிவாய்க்கால் என்பதை தமிழ்த்
தேசியர்கள் உணர்வதில்லை. பாசிசத்தின் முதற் படியே இன அடையாள அரசியல் என்பதை உலக
வரலாறு மீண்டும் மீண்டும் பல்வேறு கட்டங்களில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தும்,
நம்மவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.
வேர்களை நாடிச் செல்லும்
போக்கு சரியே. நாகரிகக் கனவுகளில் நாம் பாரம்பரியத்தின் ஆரோக்கியமான பல கூறுகளை
இழந்துவிடுகிறோம். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அவற்றை மீட்டெடுப்பதில் காட்டும்
அக்கறையும் பாராட்டுக்குரியதே.
ஆனால் பாரம்பரியத்தைக் காக்கும்
முயற்சிகள் பழையனவற்றின் கோரமான பகுதிகளையும் நாம் ஆராதிப்பதாக முடியக்கூடும்.
தேசியம் பாசிசமாக மாறுவது அப்படித்தான்.
ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற தலித்
முற்போக்கு சிந்தனையாளர்கள் அச்சப்படும் அளவு இருக்கிறது சுற்றுச் சூழல்
ஆர்வலர்களின் மண் பற்று.
கிராமங்கள் நமது கல்லறை.
நகரமயமாதலே நம் விடியலுக்கு வழி என்ற ரீதியில் தலித் ஆர்வலர்கள் பேசும்போது
அவர்கள் நவீனமயத்தின் நேர்மறை அம்சங்களைக் கருத்தில் கொள்ளத் தவறுகின்றனர்
என்றுதான் நானும் நினைக்கிறேன்.
ஆனால் கிராமப்புற சமூக
அடுக்குக்கள் பல பிரிவினருக்கு அநீதியைத் தொடர்ந்து இழைத்து வருகின்றன என்பதை
பகிரங்க ஒப்புதல் பிரகடனமாக வெளியிடாமல், இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதை மட்டும்
பன்னிப் பன்னி சொல்லும்போது, ஜாட் சாதியினரின் காப் அல்லது நம் கவுண்டர், தேவமாரின்
பஞ்சாயத்துகளை நம் ஆர்வலர்கள் romanticize செய்கின்றனரோ என சந்தேகங்கள் எழுவது
தவிர்க்க இயலாதது .
எப்படியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
இனவாத அரசியலால் ஈர்க்கப்படும்போது, அத்தகைய பிற்போக்கு அணுகுமுறைகளை
நிராகரிப்போரிடமிருந்து விலகிச் செல்கின்றனர்.
இனவெறி கொக்கரிப்பிற்கு கை
தட்டவென ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும்தான். ஆனால் அது மைய நீரோட்டமாக மாற
வாய்ப்பு அதிகமில்லை. அவ்வாறு மாறுவது நல்லதுமல்ல.
No comments:
Post a Comment