Tuesday, September 30, 2008

பறையர் சொல், அடையாள அரசியல், தடுமாறும் தலித் அறிவுஜீவிகள்



மறுபடியும் காலசுவடு. வெளியீட்டாளர் கண்ணன் இதைப் படித்தால் கோபப்பட்டாலும் படுவார். உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்பார். நண்பரே. தற்செயலாக நடக்கிறது இது. இதழைப்பற்றி அல்ல. ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை குறித்தே.

பறையன் என்னும் சொல் மீதுள்ள பகை என்று முழங்கித்தள்ளியிருக்கிறார்.அவுட்லுக் இதழில் காஷ்மீர் நிருபர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்த ஒரு கட்டுரைக்கு Pariah’s Profession என்று தலைப்பிட்டிருப்பதற்கு. கடந்த ஆண்டும் இப்படித்தான் புகைபிடிப்பவர்களைப் பற்றி அப்படி எழுதப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு. ஒரு பெரிய வரலாற்றையே எழுதிவிட்டார் இவ்வாறு அச்சொல்லை பயன்படுத்துவது பூர்வகுடியினரை இழிவுபடுத்துவதாகும். அமெரிக்காவில்கூட கறுப்பர்களை Afro-Americans என்றழைக்கத் துவங்கிவிட்டார்கள்,இது
அந்நாட்டு ஊடகங்களின் லிபரல் மனப்பான்மையினை வெளிப்படுத்துகிறது, இங்குதான் சொரணை இல்லை என்கிறார்.

தலித் அறிவு ஜீவிகள் மீது எனக்கு பெரிய மதிப்பும் இல்லை, அவர்களிடம் எதிர்பார்ப்பும் இல்லை. அரசியல்வாதிகளைப் போன்று தலித்தியம் இவர்களுக்கும் தங்களை வளப்படுத்திக்கொள்ள உதவும் ஒரு கருவி. அவ்வளவே. தொடர்ந்து பல்வேறு வழிகளில் சுரண்டப்பட்டு வரும் தலித் மக்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. முழங்குவது, உசுப்பேற்றிவிடுவது, எரியும் தீயில் குளிர் காய்வது, இதுவே இவர்களின் அணுகுமுறை.

போகட்டும். கட்டுரையில் கூறப்படும் எடுத்துக்காட்டுக்கள் ஒன்றும் தலித்துக்களை இழிவுபடுத்தும் வகையிலே இல்லை. மாறாக இது தவறு எனும் ரீதியிலேயே இருக்கின்றன. சுவாமி பேச்சு தவிர. ஏன் இப்படிக் குதிக்கவேண்டும்.

எவரையும் பறையா என்றழைத்தால் அதற்காக சண்டைக்குப் போகலாம். வழக்கு தொடுக்கலாம். ஏதோ ஒரு பகுதி அல்லது நபர் அநியாயமாக ஒதுக்கிவைக்கப்படும்போது அது தீண்டத்தகாதவர்கள் நடத்தப்படுவதைப் போன்றது என்று கூறுவது தவறா, துரோகமா, ஆதிக்க உணர்வா?

காலா காலமாக் நடைபெற்று வந்த் கொடுமைகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல் வேறு வடிவங்களில் தொடர்கின்றன. அவற்றை எதிர்த்து சமரசமற்ற போராட்டங்களுக்கு வழியில்லை, எல்லோருமே பதவிகளுக்கு அலைகிறார்கள், ஒரு ஸ்ரீநிவாச ராவ் தஞ்சைப் பகுதியில் சாதித்ததில் ஒரு பங்கைக் கூட தலித தலைவர்கள் எவரும் செய்யவில்லை. ராவ் பணியாற்றிய பகுதிகளில் மட்டும் எப்படி தீண்டாமைக் கொடுமைகளுக்கு பெருமளவில் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது எனக் கேள்வி எழுப்புவதில்லை, தலித் தலைவர்கள் இப்படியெல்லாம் போரிட வேண்டும் என்று சொல்ல முன்வருவதில்லை, மாறாக தலைப்புகளுக்கு எதிராக போர்பிரகடனம் செய்கிறார்கள் இந்த அட்டைக் கத்தி வீரர்கள்.

அடையாள அரசியல் வெறும் அடையாளங்களில் முடங்குவதும் இயல்புதானோ?

1 comment:

Anonymous said...

மிகத் தெளிவாக உங்கள் கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள். இதற்கு பதில் சொல்பவர்கள் யாரும் நேரடியாக பதில் சொல்லாமல், உங்களைத் திட்டினால் ஆச்சரியமில்லை. தலித்களின் உண்மையான பிரச்னைகளைப் பேச ஆரம்பித்தால், வன்னியர், தேவர்களை எதிர்க்க வேண்டி வரும். பிறகு சேதுராமன், அறிவுமதி, சீமான், பாரதிராஜா எல்லோரும் கோவித்துக் கொள்வார்கள். அதனால் இம்மாதிரி தத்துவச் சொல்லாடல்களில் ஈடுபட்டு தாகம் தீர்க்கிறார்களோ என்னவோ?