நடந்தாய் வாழி காவேரி!! காலச்சுவடின் வெளியீடு. பயணக்கட்டுரைகளில் க்ளாசிக் என்று அறிமுகம். இத்தகைய நூல்கள் பற்றி நன்கு அறிந்த நண்பர் பரிந்துரை. தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரை காவிரிக் கரையோரமே பயணம் செய்து அற்புதமாக சிட்டியும் தி.ஜாவும் எழுதியிருக்கிறார்கள். 70 களில் எழுதப்பட்ட அது அக்கால வாழக்கையினை நம் கண்முன் கொண்டு நிறுத்தும் என்றார். மிக ஆவலுடன் நண்பரிடமிருந்து பெற்று வந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.
மாயவரத்தில் காவேரிப் பட்டணம் போகும் சாலை, நூல் பிடித்தாற்போன்று எனத்துவங்குகிறது. பூம்புகாரில் மரக்கலங்களில் ஏற்றப்பட வந்த ஏற்றுமதிப் பொருட்கள் இச்சாலை வழியாகத்தான் சென்றிருக்கவேண்டும், படைகளும், பண்டங்களும் சுணக்கமின்றி விரைவதற்காகவே, வளைவுகள் அதிகமின்றி கூடியவரை நேராக அமைத்திருப்பார்கள், இவ்வழியாகத்தான் கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு சென்றிருப்பார்கள்...நிமிர்ந்து உட்கார்ந்தேன். சாலையின் அமைப்பு பற்றி தேர்ந்ததொரு மதிப்பீடு, இலக்கியத்தில் அப்படி ஓர் ஆழ்ந்த ஈடுபாடு, பழந்தமிழர் வாழ்க்கையில் தம்மையே இழக்கும் போக்கு.
ஆஹா, ஒரு யுகமே நம் கண் முன் விரியப்போகிறது. ரோலர் கோஸ்டர் போல, பல்வேறு எழுச்சிகள், வீழ்ச்சிகள் ஊடாக நமது வரலாற்றை நமக்கு கற்றுத்தர இருக்கிறது, இது ஓர் அதி அற்புத் கால இயந்திரம்தான், சந்தேகமே இல்லை என் முடிவெடுத்து, ம்ற்ற வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, புத்தகத்தில் மூழ்கினேன்.
ஆனால் அவசரப்பட்டுவிட்டேன் என்று அப்புறம் தான் புரிந்துகொண்டேன். எத்ற்கெடுத்தாலும் எங்கள் காவிரி என்று பூரிக்கிறார்கள். ஆகா காவியத்தாய், எவ்வளவு பேரை வாழவைக்கிறாள் என்கிறார்கள் மறுபடி, மறுபடி, ஏதோ காவிரி ஒரு உண்மையாகவே பெண்ணாக இருந்து, உலகை வாழவைக்கவே தன் வாழ்வை அர்ப்பணித்திருப்பது போன்று! வறண்டு போய் விட்டால், இப்போதெல்லாம் தண்ணீரே இருப்பதில்லையே, மக்களை தாய் ஏமாற்றுகிறாள் என்று சொல்லலாமா? மிக மிக மிகையான புளகாங்கிதம். நமது தமிழ்ப் புலவர்களைப் போன்று. எரிச்சலையே ஏற்படுத்துகிறது. நூலெங்கும் அத்தகைய தொனிதான்.
அப்புறம் ஒரே தலபுராணம். தாங்கவில்லை. இறைவனின் மகிமையில் தம்மையே மறக்கிறார்கள். ஏன் அந்த அற்புதக் கடவுள் இப்படி அலங்கோலமாக தன் படைப்புக்களையே வைத்திருக்கிறான் என்று கேட்க மறுக்கிறார்கள்.
காஞ்சி சங்கராச்சாரியாரை, மூத்தவரைத்தான், நினைவு கூர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். மடம் வெளியிட்ட ஒரு புத்தகத்திற்கும் மைசூர் பகுதியில் அவர்கள் பார்த்ததற்கும் தொடர்பில்லை என்று வாக்குமூலம் கொடுத்திருப்பது சற்று ஆறுதலைத்தருகிறது.
மலைவாழ் மக்களை அவன் இவன் என்று விளிக்கும்போது அவர்களின் நடுத்தர வர்க்க மனோபாவம் அருவறுப்பாக வெளிப்படுகிறது.
எல்லாவற்றையும் விட பெரிய ஏமாற்றம், இவர்களது இலக்கியத்தேடல், ஆன்மிகத்தேடல், வரலாற்றுத்தேடல் இவற்றில் மனிதர்கள் எங்கே?
கரையோர வாழ்க்கை எப்படி இருந்தது? வாழ்நிலை, பொருளாதார சமூக சூழல், இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் காணோம். நடுத்தர வர்க்கத்தினர் ஒரு தீவில்தான் வாழ்கின்றனர் என்ற புரிதலை மெய்ப்பிப்பதாகவே பயண நூல் அமைந்திருக்கிறது.
கர்நாடக சங்கீதத்தில் நாட்டமிருப்பதால் அது குறித்த சில பகுதிகள் மன நிறைவைத்தந்தன.
மற்றபடி ஆங்காங்கே வரும் ஒரு செட்டியார், கன்னடச் சிறுவன், இச்சித்திரங்கள் மனதைத்தொடும். விரும்பி இருந்திருந்தால் அப்படியும் அவர்கள் எழுதியிருக்கமுடியும் என்று சொல்லுகின்றன அப்பகுதிகள்.
தி.ஜா மீது எனக்கிருக்கும் ஒரு பொதுவிதமான அலெர்ஜியை மேலும் அதிகப்படுத்தியது. சமூகத்தின் அனைத்து பரிமாணங்களையும் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதமான மனித நேய எழுத்தாளன் (ஒரு கால கட்டம் வ்ரையிலும்) ஜெயகாந்தனுக்கு தி.ஜா ஈடல்ல. பொறாமை பிடித்த, சமூக அக்கறை அற்ற இலக்கியவாதிகள், தூக்கிப்பிடித்த எவரும் ஜெயகாந்தன் அளவு அடித்தட்டு மனிதனை நேசிக்கவில்லை, சமூக மாற்றத்திற்கு ஏங்கவில்லை என்ற என்னுடைய மதிப்பீட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது நடந்தாய் வாழி காவேரி.
ஜெயகாந்தனை விட்டிருந்தால், அவர் எவ்வளவு தான் மமதை கொண்டிருப்பவரானாலும், இப்படி தன்னிலேயே தன்னை இழக்கும், தீவு நூலை எழுதியிருந்திருப்பாரா? ஒவ்வொரு சொல்லிலும் மனித நேயம் ததும்பி வழிந்திருக்காதா? அநீதியை சாடும் தார்மீக கோபம் கொப்பளித்திருக்காதா?
ஆனாலும் சில விஷ்யங்களை, குறிப்பாக, தி.ஜா-சிட்டியின் அறிவுப் பரிமாணங்களை, தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சியே.
1 comment:
// விரும்பி இருந்திருந்தால் அப்படியும் அவர்கள் எழுதியிருக்கமுடியும் என்று சொல்லுகின்றன அப்பகுதிகள்.
//
இரண்டாவது முறை முழு கட்டுரையும் படித்ததும் தான் இந்த பாயிண்ட் புரிகிறது. ”எழுத முடிந்து, ஆனால் எழுதாததால்” உங்களுக்கு வருத்தம். சரி தான்.
அடுத்த புத்தகத்தில் எழுதுவார்களோ என்னவோ...
Post a Comment